ஓர் நரி உணவு தேடிக் கொண்டிருந்தது. ஆற்றின் அக்கரையில் கரும்பு தோட்டம் இருந்ததைக் கண்ட நரி, அத்தோட்டத்தில் நண்டுகள் நிறைய இருக்கும் அவற்றை உண்ணலாம் என்று எண்ணியது. ஆனால் அக்கரை போக ஆற்றை கடக்க வேண்டும் என்ன செய்ய என்று யோசித்தது. அவ்வழியே சென்ற ஒட்டகத்திடம், ஒட்டகமே உனக்கு நல்ல உணவு கிடைக்கும் இடம் ஒன்று உள்ளது, அங்கு போகலாமா என்று கேட்டது. ஒட்டகம் சம்மதம் தெரிவித்ததும் ஆற்றினைக் கடக்கலானார்கள். ஆற்றினைக் கடந்து கரும்பு தோட்டத்தைக் கண்டதும் ஒட்டகம் மிகவும் மகிழ்ச்சியாக கரும்பைத் தின்றது. நரியும் ஓடி ஓடி நண்டுகளைப் பிடித்து தின்றது. நரிக்கு வயிறு நிறைந்தும் மகிழ்ச்சியில் உடனே ஊளையிட்டது. நரியின் ஊளை சப்தத்தைக் கேட்டு தோட்டக்காரன் ஓடி வந்து ஒட்டகத்தை தடியால் அடித்தான். ஒட்டகத்தின் முதுகு வீங்கிப் போனது. ஒட்டகம், நம்மை புல் தான் மேய விட்டார்கள், நாமோ கரும்பு தோட்டத்தில் புகுந்துவிட்டோம் என தன் தவறை உணர்ந்து ஆற்றங்கரைக்கு வந்தது. அங்கு நரியைக் கண்டது. நரி ஒட்டகம் அடி வாங்குவதைக் கண்டதும் ஆற்றங்கரைக்கு ஓடி வந்து விட்டது.
நரி ஒட்டகத்தைக் கண்டதும் பட்டென்று ஒட்டகத்தின் முதுகில் ஏறி அமர்ந்து கொண்டது. நண்பா இனி இங்கு இருக்க வேண்டாம், நாளையிலிருந்து இருட்டிய பின்னரே வரலாம் என்றது. ஒட்டகம் நரியிடம் கேட்டது, நரியாரே நீர் ஏன் ஊளையிட்டீர் என்று. உடனே நரி கூறியது, நண்பா வயிறு நிறைந்தால் எனக்கு மகிழ்ச்சி வந்து விடும், உடனே ஊளையிட்டு விடுவேன் என்றது. ஒட்டகம் அப்படியா சங்கதி என்று கேட்டுக் கொண்டது. ஆற்றின் நடுப்பகுதி வந்தது. ஒட்டகம் மெல்ல படுத்தது. நரி, ஒட்டகத்தாரே என்ன செய்கிறீர்கள் என்றது. எனக்கு மகிழ்ச்சி வந்து விட்டால் நீரில் புரண்டு உருண்டு எழுந்திருப்பேன் என்றது. ஒட்டகம் தண்ணீரில் புரள நரி ஆற்றோடு போனது. ஆபத்தான சேர்க்கை அவசரத்துக்கு உதவாது என்றது ஒட்டகம்.
சிவம்மா