ஒரு யோகிக்கு உள்ள மதிப்பும், மரியாதையையும் ஓர் செல்வந்தன் கண்டான். அவரைக் கண்டு பேச வேண்டும் என்று காத்திருந்தான். யோகி தனிமையில் இருக்கும் பொழுது அவர் அருகில் சென்றான். சாமி என்னிடம் பொருள், செல்வம் அனைத்தும் உள்ளது. பெரியவர்கள், சிறியவர்கள், மன்னன், ஆண்டி, அரசன் என அனைவரும் தங்களிடம் அருள் செல்வத்தைப் பெற்றார்கள்.
என்னிடமோ பொன்னும் பொருளும் உள்ளது. ஆனால் அருள் இல்லை. நான் தங்களைப் போல் தவம் செய்ய இயலாது. தங்களைப் போல் என்னை வருத்திக் கொள்ள இயலாது. தங்களைப்போல் உணவு உண்ணாமல் உறங்க முடியாது. தங்களைப்போல் வெட்டவெளியில் தங்க இயலாது. தங்களைப்போல் மாற்று உடை இல்லாது இருக்க இயலாது. தங்களைப் போல் என்னால் ஊர் ஊராகத் திரியவும் இயலாது. நான் என்ன செய்வேன். எனக்கு அருள் வேண்டும் சுவாமி என்றார்.
யோகி அவனிடம் பொன்னைக் கொடு, பொருளைக் கொடு, அருளைப் பெறுவாய் என்றார். அவனுக்குப் புரியவில்லை. அவர் மீண்டும் கூறலானார். உன் பொன், பொருள் எல்லாவற்றையும் தானம் செய். அருள் நிலையைத் தானாகப் பெறுவாய் என்றார். எவ்வாறு சுவாமி என்றான். செவ்விசை செய்வான் இறைவன் என்றார்.
பொன், பொருள், போகம் அனைத்தையும் துறந்து தானம் தர்மங்கள் செய்தான். அவன் மனம் விசாலமானது. ஒரு ஆனந்தம் அவனுள் எழுந்தது. மிக ஆனந்தமாக ஆடி பாடி ஓடி திரிந்தான். மக்கள் அவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்றார்கள். அவன் ஆடிப் பாடிய வண்ணம் யோகியைக் கண்டான். அப்போது அவரிடம் சொன்னான், சுவாமி உலகில் இல்லாத ஒன்றை அடைந்துவிட்டேன் என்று. அது என்னை ஒரு இடத்தில் இருக்கச் செய்ய விடவில்லை. ஆனந்தமாய் இருக்கிறேன். அவனோடு அவனுடனே என்றான். ஊரார் அவனைப் பைத்தியம் என்றார்கள். ஆனால் அவனைப் பாதுகாக்க மறக்கவில்லை. எத்தனை பெரிய மனம் அவருக்கு என்று அவரை அன்பு செய்து ஆதரித்து அவர் தேவைகளை பூர்த்தி செய்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பலன் கிடைத்தது. அன்று மக்கள் புரிந்து கொண்டார்கள் செல்வந்தர் இந்த உலகில் இல்லாத இறை செல்வத்தை பிடித்துவிட்டார் என்பதை அறிந்தார்கள். காரணம் இறை செல்வத்தைக் கண்டுவிட்டால் சொல்ல வார்த்தைகளே இல்லை. ஆடி பாட நேரம் போதவில்லை என் செய்வேன் யான்!
சிவம்மா