திருவண்ணாமலை முதல் நாள் கொடியேற்றம்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருநாளினை முன்னிட்டு அண்ணாமலையாருக்கு கொடி ஏற்றபட்ட காட்சியினை
விவரிக்க வார்த்தைகளே இல்லை. அண்ணாமலையாருக்கு இரவு முழுவதும் அபிஷேகம் நடந்து முடிந்து, அவரை பல புடவைகள் வைத்து திருவாச்சியுடன் கூடிய பல்லக்குடன் இணைத்து கட்டுவார்கள். அன்னையினை பல புடவையுடன் ஒரு உருளை தலையனை வைத்து கட்டுவார்கள். பின்னர் அண்ணாமலையாருக்கு நகை பெட்டி வந்தடையும். பின் ஒவ்வொரு நகையாக அண்ணாமலையாருக்கு சாற்றுவார்கள். பின்னர் நகைகளை நூல் கொண்டு இருக்கமாக கட்டுவார்கள்.

அதன்பின் பூ அலங்காரம். வெவ்வேறு நிற பூக்களை தேர்வு செய்து அதனை ஒன்றோடு ஒன்று இணைத்து கட்டுவார்கள். கடைசியாக பெரிய மாலையை வைத்து கட்டுவார்கள். அண்ணாமலையாரின் முழு மாலையும் அண்ணாமலையாரோடு இணைந்து இருக்கும். பிறகு அண்ணாமலையாருடன் அன்னையையும் இணைத்து பெரிய மாலையினை வைத்து கட்டுவார்கள்.
அண்ணாமலையாருக்கு பக்தர்களின் அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் முழங்க ஆரத்தி தருவார்கள். அத்தனை விதமான ஆரத்தியும் காட்டப்படும். ஆரத்தி முடிந்ததும்

பல்லக்கை ஏற்றக் கூடிய பெரிய கம்புகள் கொண்டு வரப்பட்டு அண்ணாமலையார் பீடத்தில் உள்ள வலையங்களோடு இணைத்து கட்டப்படும். பின்னர் அண்ணாமலையாரின் பக்தர்கள், அவரை வெளியே கொண்டு வர முன் வந்தவர்கள் பல்லக்கை அசைப்பார்கள். அண்ணாமலையாரை வெளியே எடுத்துச் செல்ல அவரை அழைக்க அண்ணாமலையாருக்கு அரோகரா என்று கோஷம் இடுவார்கள். இக்கோசத்தினை எழுப்பியவாறு அண்ணாமலையாரை பிடித்து தொங்குவார்கள். அவர் வர மறுப்பதும், பக்தர்கள் அவரை அழைத்து இழுப்பதும் என சில நிமிடம் இந்த போராட்டம் தொடரும்.

இவர்களது போராட்டத்தில் அண்ணாமலையாரின் பின்னால் அவரது பலு சாய்ந்து இழுக்கும். பின்னர் பக்தர்களின் அன்பின் அழைப்புக்கு செவிசாய்த்துவிட்டவராக மிக வேகமாக அதிரடியாக வெளிவருவார்.அண்ணாமலையார், தனது பக்தர்கள் மற்றும் தனது அடியார்களை கண்டதும் அவரது முகத்தில் தனி மகிழ்ச்சியையே உணர முடியும். அபிஷேகத்தின் போது ஒரு புன் சிரிப்பும், ஆரத்தியின் போது அழகிய சிரித்த கமலங்களையும் காணலாம். ஓதுவார் ஓதும் போது அண்ணாமலையார் முகத்தில் அமைதியும், மக்கள் அரோகரா போடும் போது உற்சாகமான பிரம்மாண்டமும், வெளி வரும் போது தனது குழந்தைகளை பார்க்கும் ஆர்வமான கண்களையும், வெளிவந்ததும் ஆனந்தமான பலத்த சிரிப்போடு ஆடுவதையும் காண இப்பிறவியே போதாதே எனக்கு.

அண்ணாமலையார் மெல்ல ஆடியவாறு, சிறிய நடையுடன் வெளியே வருவார். பத்து அடிவைத்து ஓர் ஆனந்த நடனம் செய்வார். ஒவ்வொரு நந்திக்கும் முன் ஆரத்தியுடன் வருவார். கொடி மரத்திடம் வந்ததும் அருணாச்சலேஷ்வரருக்கும் மலையாக உள்ள அண்ணாமலையாருக்கும் ஆரத்தி காட்டுவார்கள். அப்போது குங்கிலிய புகை போடுவார்கள். அந்த குங்கிலியம் வெண்புகை போல் மூடிக் கொள்ளும். அந்த வெண்புகை மெல்ல மெல்ல கறையும், அப்போது அதில் அழகிய அண்ணாமலையார் சிரித்த முகத்தோடு அன்னையுடன் தோன்றுவார். இந்த தோற்றம் கைலாயத்தையே நினைவுப்படுத்தியது.
இக் காட்சியை கைலாய தரிசனமாக கண்டு களித்தேன். அண்ணாமலையாரின் தரிசனத்தில் மிக உயர்ந்ததரிசனம் அதுவாகும்.
இந்த தரிசனம் காணும் பேறு அனைவருக்கும் வேண்டும்.

அண்ணாமலையார் ஆடுவது அங்கு வாசிக்கப்படும் உடல் ஒலிக்கு ஏற்றவாரே ஆகும்.
இங்கு வாசிக்கப்படும் பஞ்சவாத்தியம் என்னும் கைலாயவாத்தியத்தை கேட்டவுடன் பக்தர்களும் தங்களது மெய் மறந்து அவரோடு ஆட முனைவரே .

கைலாயவாத்தியம் வாசிப்பவர்கள் ஒன்று சேர்ந்து அண்ணாமலையாரை தூக்கி ஆட்டுபவர்கள் காதுகளில் கைலாய ஒலி கேட்கும் வண்ணம் அண்ணாமலையாரை சூழ்ந்து கொள்வார்கள்
அண்ணாமலையார் ஆனந்தமாக உடலின் வாத்தியத்துக்கு ஆடுவதை காணும் போது நாம் கைலாயத்தில் இருப்பதை உணரலாம்.

காருண்யத்தின் கருணாகரன் ,
வானத்து அரசன், வையத்து தலைவனே நம்மை காண்பது தான் எத்தனை பெரிய பாக்கியம். அதிலும் அவரது ஆனந்தம் நம்மை இப்பிறவி விடுதலைக்கு வழி தேடும் செயலை தூண்ட செய்து விடும்.
அண்ணாமலையார் மூன்றாவது நந்தியின் பின் அமைந்து உள்ள கொடிமரத்தின் அருகில் வந்து ஆடுவார். கைலாயவாத்தியம் மற்றும் மங்கள வாத்தியமான நாத சுரம் முழங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்படும். அங்கு உண்ணாமுலை தாய் தனித்து வந்து மக்களுக்கு அருள் செய்வார்.

இங்கு அண்ணாமலையார்க்கு பெரிய ஆரத்தி தரப்படும். இங்கு அருணாச்சலேஷ்வரராக உருவத்திற்கும், அண்ணாமலையாராக மலைக்கும் (அருவத்திற்கும்) ஆரத்தி காட்டப்படும். கொடி ஏற்றி முடித்ததும் இசையோடு பயணித்து வெளியே வருவார். அவர் வருகையை எதிர்பாத்து மக்கள் வெல்லம் அலை அலையாக திரண்டு இருக்கும். அவர்களை கண்டதும் அடையும் மிக்க மகிழ்ச்சியின் திளைப்பை அவரது ஆனந்த நடனத்தில் காணலாம். அர்த்த மண்டபத்தில் இருந்து ஒவ்வொரு இடமும் நகரும் போதும் பஞ்சவாத்தியம், மங்கள வாத்தியம் மற்றும் பக்தர்களது அண்ணாமலையாருக்கு அரோகரா கோசத்தின் திளைப்பில் தான் நகருவார்.

அண்ணாமலையார் கொடி ஏற்றிய பின் பெரிய நந்தியிடம் வருவார். அங்கு அவரது கைலாய வாத்தியத்துடன் கூடிய நடனத்தை காண தான் கண் கோடி வேண்டும்.

சிவனடியார்களின் கோசத்தால் மகிழ்ந்ததை அவரது பெரும் சிரிப்பே உணர்த்தும்.
தனது குழந்தைகளைப் பார்த்த புன்னகை மாறாது வெளியில் வருவார். அங்கு அவரது ஆட்டத்தால் காணும் நம்மை உற்சாகபடுத்துகிறாரா அல்லது நம்மை கண்டாதால் அவர் உற்சாகமாக இருக்கிறாரா என்பதை அறிய முடியாது. காரணம் உற்சவமூர்த்தி என்ற பெயருக்கு ஏற்றவாறு அழகிய சிரிப்பில் மயங்காதவர்கள் உலகில் இல்லையே.
அண்ணாமலையாரின் சிரிப்பு, அவரது அழகிய முகம் போல் யான் வேறு எங்கிலும் கண்டதும் இல்லையே .
அவரது அழகில் மயக்கமுற்றவர்கள் மீண்டதும் இல்லையே.

அண்ணாமலையார் தீபத்தில் மலை வலம் வருவதாக ஐதீகம், இது செவி வழி செய்தியே ஆகும். அண்ணாமலையார் திருநடனத்தின் வர்ணனையை எவ்வாறு சொல்லி புரியவைப்பேன்.
அன்னை உண்ணாமுலை வெளி பிரகாரத்தில் இருந்து வெளியே வருவார். அவர் தனியாக வந்தாலும், அவரையும் இசையோடு அசைத்து நடனிக்க செய்வார்கள். அண்ணாமலையாரோடு இணைந்து வந்தவாரு இருப்பார். அன்னை தமக்கு உபவாசகம் செய்பவர்களை காண்பதையும் அறியலாம். ஆம்! அன்னையின் மீது பற்றுள்ளவர்கள் அம்மா அம்மா என்றும், தாயே என்றும் கதறுவதை காணலாம்.

அன்னையின் பக்தி மிக பயபக்தியாக இருக்கும். அம்பாளை உபவாசகம் செய்பவர்கள் அன்னையோடு ஆடி வருவதைக் காணலாம்.
இவர்கள் உண்ணாமுலை தாய்க்கு அரோகரா என்று கோசம் இட்டபடியும், இசையோடு ஆடியவாறும் அண்ணாமலையாரொடு வருவார்கள்.

அண்ணாமலையாரின் தரிசனம் காண வருபவர்கள் அண்ணாமலையார் மீது பித்தாக தான் இருக்க வேண்டும் என்றே தோன்றும். அத்தனை அன்பு அண்ணாமலையார் நம் மீது வைத்த அன்பு என்பதை உணரும் போது, நமது உயிரும் அவரோடு உடனே கலந்தால் நலமே என தோன்றும். அண்ணா மலையாரை வாழ்வில் கண்டு உணரந்தும் வாழ வேண்டும்.

Share this:

Leave a comment

[mc4wp_form id="2990"]

Copyright © Siva Sri Thiyaneswar Amma Ashram. All Rights Reserved.

× CHAT US