எனது படைப்பில் பிடித்த கதை .
ஒரு அழகிய கிராமம் இருந்தது. அதில் இருந்த மக்கள் எல்லோரும் ஆனந்தமாக இருந்தார்கள்.
அவர்கள் எல்லோரும் அவரவர் வேலையை செய்து கொண்டிருந்தார்கள். அவ்வூருக்கு ஒரு ஆண்டி வந்தார். அவர் புதிய நபர்களோடு வாழவும் நினைத்தார். ஆனால் அங்கு இருப்பவர்கள் யாரும் அவருக்கு அன்னம் தரவில்லை.
ஒவ்வொருவரையும் சென்று அன்னம் யாசித்துப் பார்த்தார் யாரும் செவி சாய்க்க வில்லை.
அவரவர் ஆட்டமும் பாட்டமுமாய் அவரை கண்டும் காணாதது போல் சென்று கொண்டிருந்தார்கள். ஆண்டிக்கு அதீத கோபம் வந்தது.
நாடு முழுவதும் செழிப்பாக இருக்கிறது என்ற அகங்காரத்தில் தான் தன்னை யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதை அறிந்து வானத்தை நோக்கி சத்தமாக சங்கை முழங்கினார் .
வருண தேவா நீ இனிமேல் மழையை நிறுத்து என்றார். வருணபகவான் மழை பொழிவதை நிறுத்திக்கொண்டார். சில காலங்கள் ஓடியது. உண்ண உணவின்றி காய் கனி இலை தழைகளை தின்று வாழ்ந்தார். ஒரு உழவன் மட்டும் எப்போதும் நிலத்தை உழுவதும்,
பூமியை சீர் செய்வதுமாக எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தார். உழவனிடம் “ஏன் நீ மட்டும் உனது வேலை செய்து கொண்டிருக்கிறாய்” என்று சாது கேட்டார்.
உடனே “சுவாமி மழை அதன் வேலையை நிறுத்தலாம். நான் விவசாயி. எனது வேலையை நிறுத்தலாகாது. எனது தொழிலுக்கு செய்யும் துரோகம். மக்களுக்கு செய்யும் பாவம்.
விவசாயிக்கு பட்டினி பழக்கபட்டது. மக்கள் பட்டினியாக இருக்கக்கூடாது. பணக்காரனால் பட்டினியாக இருக்க முடியாது. பணக்காரன் பணத்தை உண்ண முடியாது.
உலகம் உயிர்(ஓலி), காற்று, நீர், உணவால் (மண்) மற்றும் இறைவனால் உழல்கிறது.
உழவன் இறைவன் போல் உறங்க கூடாது. உழுவதும் மறக்க கூடாது” என்றான்.
எனக்கும் மறக்காமல் இருக்க வேண்டுமல்லவா, அதனால் தான் வேலையை தொடர்ந்து செய்கிறேன் என்றான்.
ஆண்டிக்கு சந்தேகம் வந்தது. சங்கு பையில் இருப்பதை தடவி பார்த்தார். உடனே சங்கை எடுத்து ஊதி பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஊதாது வைத்து இருந்தால் நாளை நமக்கும் கூட மறந்து போகும் என்பது நினைவுக்கு வந்தது. உடனே சங்கை எடுத்து வானத்தை நோக்கி முழங்கலானார். உடனே மழை பொழிந்தது. நாட்டு மக்கள் மீண்டு அதிக சந்தோஷம் ஆனார்கள். இந்த சாபம் யாரால் என்று ஊரார் தெரிந்து கொண்டார்கள்.
ஊருக்கு ஒரு யோகி வேண்டுமென்றும், ஆண்டி சாபம் பொல்லாதது என்றும் அறிந்து கொண்டார்கள். எல்லோரும் அவரை வணங்கி, சிறிது அன்னம் இட்டார்கள்.
ஊதிக் கொடுத்தான் ஆண்டி என்று அவரை போற்றினார்கள். சங்கு ஊதியதும்
ஒரு பிடி சாதம் கொடுத்தார்கள். தங்களால் இயன்ற ஒரு கை பிடி அன்னத்தை அவர்கள் தந்தார்கள்.
அன்று முதல் ஆண்டியும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக ஆண்டவனை துதித்து மகிழ்ந்தார்.
ஆனந்தமாக ஆடி பாடி இறைவனை துதிக்களானார்.
🌹சிவம்மா🌹