ஒரு துறவி இருந்தார் அவர் மலையடிவாரத்திலுள்ள கிராமத்தில் தங்கி யோகம் செய்யலானார். ஊரில் பஞ்சம் வந்தது. எனவே ஒரு ஏழை குடியானவனின் வீட்டுத் திண்ணையில் தங்கியிருந்து தவம் செய்யலானார். ஏழைக் குடியானவன் துறவிக்கு உணவு தந்து பாதுகாத்தான்.
குடியானவனின் வீட்டின் எதிரில் ஒரு தாசி இருந்தாள். அவள் மிகுந்த பக்தி உடையவளாக இருந்தாள். அவளது கடன்களாக கடமைகளை, தான தர்மங்களை மறைமுகமாக சரிவர செய்து கொண்டிருந்தாள். துறவி ஏழை குடியானவனின் உணவை உண்டு தவம் செய்தார்.
துறவி தவம் செய்யும் போது எதிரில் உள்ள வீடு அவர் கண்களில் பட்டது. அங்கு நிறைய மனிதர்கள் வந்து போவதைக் காணலானார். விசாரித்த பொழுது அவருக்கு தெரிந்தது, அவள் தாசி என்று. ஒவ்வொரு முறையும் அங்கு வருபவர்களைக் கணக்கிடலானார். தன் அருகில் ஒரு பகுதியில் எண்ணிக்கைக்காக கல் எடுத்து வைக்கலானார். சில நாட்களில் ஒவ்வொரு கல்லாக சேர்ந்து அது சிறிய கற்குவியல் ஆனது.
ஒரு நாள் அவள் இறந்து போனாள். மனிதர்களிலே அவளுக்காக சொல்லமுடியாத துக்கங்களை உடையவர்களும் இருந்தார்கள்.
துறவி அவளது பலனும் பயனும் என்ன என்று காண தோன்றியது.
துறவி அவள் எங்கு போவாள் என யோகத்தால் அறிய முற்பட்டார். அங்கு வந்த முனிவரிடம் தனக்கான சொர்க்கத்தையும் அவளுக்கானதையும் கேட்டார் .
முனிவர் அவளுக்கு புஷ்பவனம் தயாராகிப் போனதைக் கண்டார்.
எனக்கானது என்ன என்று கேட்டார். உனக்கானதை பூதகணங்கள் தயார் செய்து வைத்து உள்ளது என்றார். துறவி ஆவலோடு அது என்ன என்று கேட்டார். நீ போகும் முன்னால் அழகிய முற்களால் செய்யப்பட்ட (பாதகுறடுகளைத்) தந்து தங்களோடு வாருங்கள் என்று அழைக்கும் என்றார். அவருக்கு மிகவும் வியப்பாக இருந்தது ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள் என்று கேட்டார் .
அதற்கு பூதகணங்கள் கூறியது, அவளது தொழில்தான் தாசி. அவள் மனமெல்லாம் இறைவன் பால் இருந்தது. இறைவனுக்காகவும் இறைவனைக் காணாது, பலநாள் இரவு பகல் என்று பாராது அழுதுகொண்டிருந்தாள். இறைவனை அடையவே அவளுக்கு அத்தனை ஆசைகள். கோயில்களில் விரட்டி அடிக்கப்பட்டாள். மக்களிடமும் நிராகரிக்கப்பட்டாள். ஊரரால் நிராகரிக்கப்பட்டாள். ஊருக்கு வெளியில் வாழ்ந்தாள். அவள் தஞ்சம் புகுந்த இடம் இறைவன் மட்டுமே.
இறைவன் வாசஸ்தலம் கோயில். ஒரு நாள் கூட அவள் கோயிலின் உள்ளே சென்று இறைவனைக் காணவில்லை.
இறைவனது கருவூலத்தை இறுதி வரைக் காணவில்லை. கோயிலினுள் அவளை அனுமதிக்கப்படவில்லை. அவளது துன்பத்தை விட உலகில் மிகப்பெரியதாக பசி இருந்தது. அவள் துன்பங்களை முழுவதுமாக போக்க தர்மங்களை பிறர் மூலம் செய்து வந்தாள். இறைவனைக் காண முடியாமல் தான் அனுபவித்தது நரக வாழ்க்கை என்பதை அறிவாள்.
இருப்பினும் தனக்கு வந்த மடல்களின் வழியே தான தருமங்களை செய்து வந்தாள். மறைமுகமாக, ஏனென்றால் அவளிடம் தான தர்மங்களையும் நேரடியாக யாரும் வாங்க மறுத்தார்கள். அவளது அன்பு இறைவனிடம் மட்டுமே இருந்தது. அதனால் இன்று அவளது விருப்பங்களுக்கு இறைவன் செவிசாய்த்து தன்னோடு வைத்துக் கொள்ள அழைத்துக்கொண்டார்.
தாங்களோ செய்வது தவம். மனம் வைத்ததோ தாசியின் வீட்டின் மேல்.
பார்வை தாசியின் திசையில் உள்ள வீடு. எண்ணம் தாசியின் வீட்டின் அறையின் உள்ளே. எண்ணிக்கை கல் தாசியின் வீட்டிற்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை அளவு. துறவியாக இருந்து தாங்கள் அவளை ஒரு பெண்ணாகக் கூட கருதவில்லை. தங்களுக்கான மதிப்பீட்டின் பலன்தான் இப்போது தாங்கள் செல்லும் உலகம் என்றார்.
துறவிக்கு ஒன்றும் பேச துணிவில்லாது போனது. செய்யும் தொழிலில் நல்லது கெட்டது இல்லை. செய்யும் தொழில் எதுவாயினும் நல்ல மனம் இருந்தால் அதுவே இறை மனமாகும். இறைவன் வாழும் இருப்பிடமாகும்.
சிவம்மா.