கண்ணையன் என்று ஒரு அழகிய தொழிலாளி இருந்தான். சிறு வயது முதல் அவன் தன் தொழிலில் மிக சிறந்தவனாகவும், உண்மையானவனாகவும், நேர்மையானவனாகவும் தொழில் செய்து வந்தான். செய்யும் தொழிலே தெய்வம் என்று அவன் கூறுவான். சொற்ப லாபத்தில் ஆனந்தமாக இருந்தான். அவனை அனைவரும் கண்ணையன் என்பார்கள். ஆனால் அவனுக்கு கண்கள் இல்லை. கண்கள் இல்லை என்றாலும், அவனது மனம் மிகவும் அழகாக இருந்தது. அன்பானவனே என்று அனைவரும் ஆசையாக பேசுவார்கள். அவன் அத்தனை அன்பு மிக்கவனாக இருந்தான். அவன் சிவபக்தனாக இருந்ததனால் அவனது அன்பு என்றும் இறைவன் மேல் குறையாது இருந்தது. அவனும் தொழில் செய்யாது, ஒவ்வொருவரையும் இறைவனாக நினைத்து சேவித்து, அவர்களுக்கு சேவை செய்வதாக, இரும்பு பட்டறையில் உள்ள பொருட்கள் சிலவற்றை தானமாகவும் தருவான். அவனோடு இருப்பவர்கள் எல்லாம் அவனை “தான பிரபு உழைக்க வழியைப் பார்” என்பார்கள். அவன் வாங்கி விற்பதில் சொற்ப லாபம் இருந்தால் போதும் என்பான். அவனது சிறுவயது முதல் இதனையே கொள்கையாகக் கொண்டு தொழில் செய்து வந்தான்.
ஒருநாள் ஊரை விட்டு ஊர் சென்று கொண்டிருந்தான். திடீரென்று மற்றவர்களோடு பேச்சை கவனித்து வந்தார். அப்போது வழி மாறி விட்டான். மாறியதால் ஒரு கிணற்றை நோக்கி கண்ணையன் சென்றார். இதைக் கண்ட இறைவனுக்கு மனம் தாளாது அவனுக்கு நண்பனாக வந்து உதவிக் கரத்தை நீட்டி ஊர் எல்லையில் விட்டார். கண்ணையன் கேட்டான், இதுவரை கண்டிராத உணர்வுகளோடு கொண்ட அழகிய நண்பா, எனக்கு எத்தனை பெரிய உதவிகளை செய்து விட்டாய், நீ யார் என்று நான் தெரிந்து கொள்ள வேண்டும். எனக்கு கண்கள் இல்லை உன்னை காண்பதற்கு. காதுகளால் உன் குரலைக் கேட்டேன். என்னால் உணர முடிந்தது, என் இறைவன் அனுப்பிய தூதுவன் நீ என்று. பின்னர் தாங்கள் இறைவன் என்று தான் எனக்குத் தோன்றியது. தூதுவராக நினைத்தது தவறு என்று வருந்திக் கொண்டே வந்தேன். என்ன செய்வது உன்னை காண முடியாத வருத்தம், இன்று எனக்கு கண்ணில்லையே என்ற வருத்தத்தை தந்து விட்டது என்றான். இதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாது என இறைவன் தன் உருவத்தைக் காண்பித்தார். கண்ணையனுக்கு பார்வை வந்தது. பார்வை வந்ததும் அவன் ஆனந்தத்தில் திளைத்தான். ஆடினான், பாடினான். அவரது கால்களில் விழுந்து இறைவா எத்தனை பெரிய கருணை உனக்கு. பிறவிக் குருடனுக்கு கண்ணை தந்து விட்டாய். நீ நண்பன் அல்ல, நீ இறைவன். அறியாது செய்த பிழையை மன்னித்து விடு என்று அவன் அழுதான். அழுதுகொண்டே இறைவன் மறைவதைக் கண்டான். மெல்லிய ஒலியாக கண்கள் இமைக்க, ஆனந்தத்தில் என்ன செய்வதென்று அவனுக்கு புரியவில்லை. ஆடிப்பாடி அமைதியானான். உலகை சுற்றிப் பார்த்தான். மீண்டும் ஒரு சிறிய துணியை எடுத்து தன் கண்களில் கட்டிக்கொண்டு, நண்பன் கொடுத்த தடியால் நடக்கத் துவங்கினான். இதை கண்ட ஊரார், கண்கள் தெரிந்த பின்னும், இறைவன் தந்த கண்ணை ஏன் மீண்டும் நீ மூடிக்கொண்டாய் என்று கேட்டார்கள். இறைவனைக் கண்ட கண்கள் இனி யாரையும் காணப்போவது இல்லை என்றான்.
சிவம்மா